snap

Tuesday, May 16, 2006

தேர்தல் முடிவு : சோ

தேர்தல் முடிவு குறித்து எழுத்தாளர் சோ கூறி இருப்பதாவது:-

தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவதற்கு நான் ஆரம்பத்திலிருந்தே சுட்டிக் காட்டி வருகிற, அவர்களுடைய கூட்டணி பலம் ஒரு முக்கியக் காரணம். ஆனால் இதையும் மீறி, அ.தி.மு.க. வெற்றி பெறக்கூடும் என்ற சூழ்நிலையும் நிலவியது. பின்னர் அது சந்தேகத்திற்குரிய தாகிற நிலை உருவாயிற்று.
இதற்குக் காரணம், தி.மு.க.வின் இலவச அறிவிப்பு கள்தான் என்ற பரவலான கருத்து, ஏற்கக் கூடியதா கவே இருக்கிறது. ஆக, தி.மு.க. கூட்டணி இத்தேர்தலில் வென்றால், அதற்கு பலமான கூட்டணி, இலவச அறிவிப்புகள் என்ற இரண்டுமே காரணங்களாக இருக்க முடியும்.

சரி, அ.தி.மு.க. கூட்டணி இத்தேர்தலில் வெற்றி பெற்றால், அதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?-என்பதையும் பார்ப்போம்.
தி.மு.க.வின் கூட்டணி பலத்தையும், இலவச அறிவிப்புகளையும் மீறி, அ.தி.மு.க. அணி வெற்றி பெற்றால், அது ஒரு சாதனையே. அம்மாதிரி நிகழ்ந்தால், அதற்கு முக்கிய காரணம், அ.தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்குப் பெரிதாக ஏற்பட்ட திருப்தியாகத்தான் இருக்க முடியும். அதைத் தவிர, தி.மு.க.விற்கு போட்டியாக ஜெயலலிதா அறிவித்த இலவசங்களும் இதற்கு ஒரு காரணமாக அமையலாம்.
அ.தி.மு.க. அணி தோற்றால், அதற்கு காரணங்களாக என்ன இருக்க முடியும்?-என்றால் சிலவற்றைக் கூற முடியும்.
அம்மாதிரி நிகழ்ந்தால்- கிட்டத்தட்ட தன்னை மட்டுமே நம்பி, ஜெயலலிதா இந்தத் தேர்தலை சந்தித்தது, தன்னம்பிக்கையை காட்டினாலும், நடைமுறை சாத்தியக் கூறுகளை அவர் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது ஒரு காரணமாக அமையும்.
விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி ஏற்படத்திக் கொள்வது, அ.தி.மு.க.விற்கு நல்லது என்ற கருத்தை நாம் ஏற்கனவே சில முறைகள் தெரிவித்திருந்தோம். அப்படி நடக்காததும் ஒரு காரணமாக அமையலாம்.
தி.மு.க. இலவசங்களைப் பொறுத்தவரையில், ஜெயலலிதா இதை இரண்டு விதங்களில் சந்தித்திருக்கலாம். ஒன்று-தானும் இலவச அறிவிப்புப் போட்டியில் இறங்குவது, இதைத்தான் அவர் செய்தார்.
மற்றொரு வழி இருந்தது. தி.மு.க.வின் இலவசங்களை நம்புவதற்கு மக்கள் தயங்கிய நிலையில் அவை சாத்தியமே அல்ல என்ற வகையில் அ.தி.மு.க. அணியின் பிரசாரம் தீவிரப்படுத்தப்பட்டிருக்கலாம். அப்படி நடந்திருந்தால், தி.மு.க.வின் இலவச வாக்குறுதிகளே, அக்கட்சியின் கூட்டணிக்கு பெரும் பிரச்சினையாகி இருக்கக் கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கலாம்.
ஆனால் ஜெயலலிதா அந்த அணுகுமுறையை கடைப்பிடிக்கவில்லை. அவரும் இலவசப் போட்டியில் இறங்கிவிட்டதால் தி.மு.க. வாக்குறுதிகளும் சாத்தியமானவையே என்ற எண்ணம் பரவ, அவரும் உதவி விட்டார். அ.தி.மு.க. தோல்விக்கு ஒரு காரணமாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நன்றி: மாலைமலர்

No comments: